தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ தாயகத்தில் தமிழீழ தனி அரசொன்று அமைய வேண்டும் - பிரதமர் வி.உருத்திரகுமாரன்
Visuvanathan Rudrakumaran
அரசியல் தீர்வு - தமிழின அழிப்பு - தாயக மேம்பாடு : யாழ் ஊடகர்களுடன் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !!
JAFFNA , SRI LANKA, March 29, 2019 /EINPresswire.com/ --இணையவழி காணொளி ஊடாக யாழ் ஊடக மையத்தில் ஊடகர்களோடு கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அரசியல் தீர்வு - தமிழின அழிப்பு - தாயக மேம்பாடு ஆகிய விடயங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு குறித்து...
தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் இனஅழிப்புக்கு உட்படாமலும் தமது மரபுவழித் தாயகத்தில் வாழவேண்டுமானால் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசொன்று தமிழர் தாயகத்தில் அமைய வேண்டும் என்பதே அரசியல் தீர்வு தொடர்பான எமது அரசியல் நிலைப்பாடு. இதனை இன்னொரு வகையில் சொல்வதானால், இலங்கைத்தீவில் இரு அரசுகள் அமைவதே தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வாக அமையும் என்றே நாம் கருதுகிறோம்.
இத் தீர்வு 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அரசியல் ஆணையைப் பெற்றதொரு நிலைப்பாடு. 50,000 க்கும் அதிகமான மாவீரர்கள் தமது உயிர்த்தியாகம் மூலம் வலுப்படுத்தியதொரு நிலைப்பாடு. தமிழீழ மக்களின் அரசியற்பெருவிருப்பாக இந் நிலைப்பாடு அவர்களின் ஆழ்மனதில் உறுதியாக இருக்கிறது என நாம் கருதுகிறோம்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின் இந் நிலைப்பாடு குறித்துப் பேசுவதற்கும், செயற்படுவதற்கும் தாயகத்தில் அரசியல்வெளி இல்லாதிருக்கிறது என்பதனை நாம் அறிவோம். இருந்தபோதும் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுமுறை குறித்து தாயகத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டு, மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் இலங்கைத்தீவின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்படுவதே உரிய ஜனநாயக வழிமுறையிலான அணுகுமுiறாக இருக்கும் என்பதே எமது நிலைப்பாடு. தனியரசு உருவாக வேண்டும் என விரும்புவோர் அதற்காகக் குரல் கொடுக்கட்டும். அதனை எதிர்ப்போர் எதிர்க்கட்டும். தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வழங்கட்டும்.
இந் நிலைப்பாட்டை ஏற்று, 6வது திருத்தச் சட்டத்தை அகற்றி, ஒரு மக்கள் வாக்கெடுப்பை நடத்தி அரசியற்தீர்வைக் காண முயலும் அளவுக்கு சிங்கள தேசத்தின் தலைவர்கள் அரசியல் முதிர்ச்சியும், ஜனநாயகப்பண்பும் கொண்டவர்கள் அல்ல என்பதனையும் நாம் அறிவோம். ஆனால், தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, அதற்காகப் போராடுவது தமிழ் மக்களின் உரிமை. அதனை நாங்கள் செய்கிறோம். தாயகத்தில் இதற்கான அரசியல்வெளி இல்லாத காரணத்தால் இது குறித்து செயற்பட வேண்எய கூடுதல் கடப்பாடு எமக்கு இருப்பதாகவும் நாம் உணர்கிறோம். இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்குரிய பூகோள, புவிசார் அரசியல் நிலைமைகள் திரட்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் இது யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்ற புரிதலும் நமக்கு உண்டு.
தமிழின அழிப்புக் குறித்து ....
இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிறிலங்கா அரசின் இனஅழிப்புக்கு உள்ளாகிறது என்பது எமது நிலைப்பாடு. தமிழின அழிப்பு என்பது சிறிலங்கா அரசின் கொள்கையாக இருப்பதால், எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழின அழிப்பு முயற்சி தொடர்ந்து கொண்டிருப்பதனை நாம் காண்கிறோம். ஆட்சியாளரின் தன்மைக்கேற்ப இனஅழிப்பு வடிவங்கள் மாறுபடுகின்றனவேயன்றி தமிழின அழிப்புத் திட்டமும் முயற்சியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இனஅழிப்பு என்பது பெரும் அரசியல் பரிமாணம் கொண்ட எண்ணக்கருவாக இருப்பதாலும், இனஅழிப்பு நடைபெறுகிறது என்பதனை ஏற்றுக் கொள்வதால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் காரணமாகவும் அனைத்துலக அரசுகளும் இனஅழிப்பை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழின அழிப்புத் திட்டத்தின் தீர்மானகரமான ஓர் அங்கமாகும். இதனை யுத்தக்குற்ற விசாரணையாகச் சுருக்குவதில் எமக்கு உடன்பாடில்லை. தமிழின அழிப்புக்கு நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட மையமாகவும் நாம் மனித உரிமைகள் பேரவையினைப் பார்க்க முடியாது. இதனால் தமிழின அழிப்புக்கான நீதியினை நாம் ஜெனிவாவில் எதிர்பார்க்க முடியாது. ஜெனிவா மனித உரிமைப்பேரவை எமது நீதி நோக்கிய பயணத்தின் ஓர் ஆரம்பப்புள்ளி மட்டுமே. அதன் வரையறைக்குள் நின்று மட்டும் நாம் நீதியினைத் தேட முடியாது.
இதனால்தான் ஜெனிவா மனித உரிமைப்பேரைவையிடம், சிறிலங்கா தொடர்பான விடயத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையிடம் கையளிக்குமாறும், தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடமோ, அல்லது அதற்கிணையானதோர் அனைத்துலகப் பொறிமுறையிடமோ கையளிக்குமாறு நாம் ஆரம்பம் முதல் கோரி வந்திருக்கிறோம். எமது இந்த நிபை;பாட்;டுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருகிறது. எனினும் தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டம் ஒரு நீண்டதூரப்பயணமாகவே அமையும். அனைத்துலக அரசுகள் தத்தமது நலன்களைத்தாண்டி நீதியின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும்.
தமிழர் தாயக மேம்பாடு குறித்து...
தமிழர் தாயகத்தின் மேம்பாடு ஈழத் தமிழர் தேசத்தின் வளர்ச்சியின் இணைபிரியாதவோர் அங்கம் என்பதனை நாம் அறிவோம். தமிழ் மக்களது பொருளாதார, சமூக, பண்பாட்டு மேம்பாடு குறித்து நாம் தமிழ் மக்களின் பார்வையில் மே;பாட்டுத் திட்டங்களை வடிவமைத்துச் செயற்பட வேண்டும். தமிழர் தேசத்தினை சிங்கள தேசத்தில் தங்கி நிற்க வைக்கும் வகையிலான திட்டங்களை மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தும் அணுகுமுறை சிங்கள அரசிடம் இருக்கிறது என்பதனை நாம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். மேம்பாட்டின் அரசியல் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். தமிழ் மக்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இல்லாத போது, தமிழர் தேச வளர்ச்சி என்ற நோக்குநிலையில் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது சவால் மிக்கதொன்றாகவே அமையும்.
ஆனால், இதேவேளை இவ் அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரை தமிழர் தேசம் தன்னை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்கவும் முடியாது. இதனால் மக்களது கைகளிலேயே தங்கி நிற்கும் மேம்பாட்டு முயற்சிகளில் தாயக மக்களும், புலம் பெயர் தமிழ் மக்களும், தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து மேற்கோள்வதற்கான வழிவகைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். உலகமயமாக்கல் அரசுகளின் கட்டுப்பாடுகளைத் தாண்டித் தரக்கூடிய வெளிகளை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனையும் கவனத்திற் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியற்பேரியக்கம் குறித்து...
தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மக்கள் வாக்கெடுப்;பின் ஊடாகப் பெறப்படும் அரசியற்தீர்வு, தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக அரங்கில் நீதி தேடல், தமிழர் தேசம் என்ற நோக்கு நிலையில் இருந்து தமிழர் தாயக மேம்பாடு போன்ற நிலைப்பாடுகள் தாயக மக்களும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் பொதுவாக முன்வைக்கக்கூடிய அரசியற் கோரிக்கைகளே. தாயக, புலம்பெயர் அமைப்புகள் இது குறித்துப் பேசி, மக்கள் மயப்பட்ட ஒரு தேசிய அரசியல் பேரியக்கத்தை உருவாக்க வேண்டும். இது ஓர் ஐக்கிய முன்னணி என்ற அரசியல் வடிவத்தில் அமைய முடியும். இந்த அரசியல் பேரியக்கமே தமிழீழ மக்களின் பிரிதிநிதிகள் என்ற நிலை எட்டப்பட வேண்டும். தேர்தல் என்பது தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியே என்ற புரிதல் ஏற்பட வேண்டும். மக்களை அணிதிரட்டி, மக்களில் தங்கி நின்று மக்கள் நலன் என்ற நோக்குநிலையில் செயற்படும் ஒரு தமிழ்த் தேசியப் பேரியக்கமொன்று உருவாக்கப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகவே நாம் உணர்கிறோம்.
இக் குறிப்புகளுடன் நாம் எமது உரையாடலை ஆரம்பிப்பதற்கான அழைப்பினை விடுக்கிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
Twitter: @TGTE_PMO
Email: r.thave@tgte.org
Web: www.tgte.org / www.tgte-us.org
பிரதமர் வி.உருத்திரகுமாரன்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Google+
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.