There were 120 press releases posted in the last 24 hours and 398,548 in the last 365 days.

சிறிலங்காவின் பொறுப்பற்ற போக்கை தடுத்து நிறுத்துங்கள்-ஐநா மனிதவுரிமை உயர் ஆணையளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகை

UN Human Rights Council

GENEVA, SWITZERLAND, February 27, 2019 /EINPresswire.com/ --

ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கும், பன்னாட்டுச் சமூகத்துக்கும் அளித்த உறுதிகளை எப்போதும் நிறைவேற்றுவதாகப் பொறுப்பற்ற முறையில் போங்காட்டம் ஆடி வரும் சிறிலங்காவை தடுத்து நிறுத்தி, இலங்கைத்தீவில் நீதியும் பொறுப்புக்கூறலும் மீளிணக்கமும் மெய்ப்படச் செய்யும்படியும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பசலே அம்மையாரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அனுப்பியுள்ளார்.

'தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா இனக்கொலை செய்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் பத்தாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொலைக்கும் வல்லுறவுக்கும் கட்டாயப் புலப்பெயர்வுக்கும் ஆளாக்கப்பட்டமைக்காக ஒரே ஒருவர் கூட விசாரணை செய்யப்படவில்லை. மற்ற ஒவ்வொருவருக்கும் கண்கூடாகத் தெரிகிற ஓருண்மையை ஐநா மனிதவுரிமைப் பேரவை கண்திறந்து பார்க்க உயர் ஆணையர் பசலே உதவுவார் என நம்புகிறோம். சிறிலங்கா என்பது நெகிழ்வற்ற இனநாயக அரசாகும், தமிழர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி அதில் ஆழ வேரூன்றியுள்ளது, ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கான கடப்பாடுகளை எப்போதாவது மதிக்கும் எண்ணம் அதற்குத் துளியும் இல்லை என்பதே அந்த உண்மை. வெளிப்படையாகச் சொன்னால், இப்படியல்லாமல் வேறுவிதமாகச் சிந்திப்பது மதிமயக்கமே தவிர வேறல்ல என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதியும் பொறுப்புக்கூறலும் நிறைவேறச் செய்வதற்கு ஐநா மனிதவுரிமைப் பேரவை யாரை நம்பியதோ அவர், அதிபர் சிறிசேனா, கடந்த மூன்று மாதத்தில் மட்டும் அவர் செய்துள்ள காரியங்களை இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பட்டியலிட்டுள்ளார் :

- ஒருதரப்பாக இனக்கொலையாளி மகிந்த இராஜபக்சேவை சிறிலங்காவின் தலைமையமைச்சராக அமர்த்தினார்.

- போர்க்குற்றங்களில் நேரடித் தொடர்புடையவர் என்று மனிதவுரிமை அமைப்புகளால் நம்பகமாகக் குற்றஞ்சாற்றப்படும் மேஜர் சிவேந்திர சில்வாவுக்கு சிறிலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரியாகப் பதவியுயர்வு கொடுத்தார்.

- அரசுத் தரப்பில் குற்றமிழைத்தவர்களை ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்கு ஆளாக்க மாட்டேன் என்று அதிபர் சிறிசேனா வெளிப்படையாகவே கூறியும் உள்ளார்.

- சிறிலங்கா நிலைமாற்ற நீதியை நிலைநாட்டத் தந்த உறுதிமொழிகளின் பகுதியாக வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் ஒரு நீதிப் பொறிமுறையை ஏற்படுத்துமென ஐநா மனிதவுரிமைப் பேரவையில் ஒப்புக்கொண்டதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


மனிதவுரிமை தொடர்பான குற்றம் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வழிவகை செய்யும்படியான உண்மை மற்றும் மீளிணக்க ஆணையம் அமைக்க சிறிலங்கா பணியாற்றி வருவதாகவும், தமிழர்கள் 'கடந்த காலத்தை மறந்து விட வேண்டும்' என்றும் வெளிப்படையாகவே ஐநா மனிதவுரிமைப் பேரவையின் முகத்திலடித்தாற்போல், பெப்ரவரி 18ம் நாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கு சிறிலங்கா அளித்த உறுதிகளுக்குத் தெளிவாகவே வஞ்சகம் செய்வதாகும். குறிப்பாக, இன்னும் ஒரு மாதக் காலத்தில், மார்ச்சு 20ம் நாள் ஜெனிவாவில் மனிதவுரிமைப் பேரவையின் மீளாய்வுக்கு சிறிலங்கா முன்னிற்க வேண்டும் என்ற நிலையில் சிறிலங்காப் பிரதமரின் இந்த அறிவிப்பு அப்பட்டமான வெட்கங்கெட்ட செயலாகும்.

இந்தப் பின்னணியில், பத்தாண்டுக் கணக்கில் தமிழர்கள் அடக்கியொடுக்கப்பட்டு வரும் பின்னணியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கடிதம் ஆணையர் பசலே அவர்களைக் குறிப்பாகக் கேட்டுக் கொள்கிறது:

1) மார்ச் 20ம் நாள் மீளாய்வுக்கு சிறிலங்கா முன்னிற்கப் போகும் நிலையில், ஐநா மனிதவுரிமைப் பேரவையின் 30-1 தீர்மான உறுதிப்பாடுகளை நிறைவேற்ற அந்நாட்டுக்கு மேலும் கால நீட்டிப்பு தர மறுக்கும்படி பேரவையை வலியுறுத்துங்கள்.

(2) உங்கள் அறிக்கை குறித்தும், பாதிப்புற்ற தமிழர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கச் செய்யப் போகிறீர்கள் என்பது குறித்தும் புலம்பெயர் தமிழ்ச் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து விவாதியுங்கள்.

(3) போர்க் காலத்தில் தமிழர்களுக்கு சிறிலங்கா அரசு இழைத்த கொடுமைகளாகிய குற்றச் செயல்களைப் புலனாய்வு செய்யவும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் அல்லது வேறொரு தற்சார்பான பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் உருப்படியான நடைபடிகள் எடுத்திடுங்கள்.

(4) சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்க உங்கள் பதவிப் பொறுப்பைப் பயன்படுத்துங்கள்.

(5) யாழ்ப்பாணத்தில் ஐநா தூதரை அமர்த்தி, அரசின் கையில் தமிழர்களுக்கு எதிராக முன்பு நடந்த, இப்போதும் தொடர்கிற மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஆறு மாதத்துக்கொரு முறை ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கு அறிக்கையளிக்கச் செய்யுங்கள்.

சிறிலங்கா தமிழர்கள்பால் காழ்ப்பும் பகைமையும் கொண்ட நெகிழ்வற்ற இனநாயக அரசு என்பது எப்போதும் தெரிந்த செய்தியே என்பதால், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திரும்பத் திரும்பக் கோரி வருகின்றது.

இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக அது நடத்தும் கையொப்ப இயக்கத்தில் அண்ணளவாக இருபது இலட்சம் பேர் ஒப்பமிட்டுள்ளனர்.

காணாமற்போனவர்களின் தமிழ் அன்னையரும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமெனக் கோரியுள்ளனர்.

இருபத்தேழு புலம்பெயர் அமைப்புகளும் சிறிலங்காவில் உள்ள தமிழ் வழக்கறிஞர் சங்கமும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளன.

இம்மாதத் தொடக்கத்தில் மனிதவுரிமைத் துறையில் விரிவான வல்லமை கொண்ட அரசுசாரா அமைப்பாகிய பன்னாட்டுச் சட்டவாளர் ஆணையம் பெருநகர்வு ஒன்றை மேற்கொண்டது. அது ஐநா மனிதவுரிமைப் பேரவைக்குத் தானே அளித்த மடலில், போர்க் காலத்தில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா செய்த குற்றங்களின் 'தன்மை', 'கடுமை' ஆகிய காரணத்தாலும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த சிறிலங்கா தனக்கு விருப்பமில்லை என்று வெளிப்படையாகவே சொல்லி விட்ட காரணத்தாலும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் அல்லது தற்சார்பான வேறு நீதிப் பொறிமுறையின் பார்வைக்கு அனுப்புவது 'முழுக்க முழுக்கத் தேவை' எனக் கூறியுள்ளது.

ஆகவே, ஐநா மனிதவுரிமைப் பேரவையில் கனடா, ஜெர்மனி, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகளடங்கிய சிறிலங்கா தொடர்பான முதன்மைக் குழு சிறிலங்காவுக்கு மீண்டுமொரு முறை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பிப்ரவரி 13ஆம் நாள் நிலையெடுத்து அறிவித்திருப்பது முழுமையான கடமையை அறவே தட்டிக் கழிப்பதும். ஐநா மனிதவுரிமை அமைப்பு முழுவதையும் கீழறுப்பதும் ஆகும். ஐநா மனிதவுரிமைப் பேரவையை ஏமாற்றுவதில் சிறிலங்கா திரும்பத் திரும்பக் குற்றம் செய்யும் குற்றவாளி, தன் செயலுக்காக வருந்தாத குற்றவாளி என்ற உண்மையைப் பொருட்படுத்தாமல் இந்தக் குழு இப்படி அறிவித்துள்ளது.

'ஆண்டுக் கணக்கில் சிறிலங்கா ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கு வெற்று உறுதிமொழிகளை அவ்வப்போது சொட்டுச் சொட்டாகக் கொடுத்துப் பேரவை தன் முதன்மைப் பணியை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகிறதே, இதற்கு மறுவினையாற்ற அது என்ன முடிவெடுக்கப் போகிறது?

இந்தக் கேள்வியில் பணயம் வைக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கான பொறுப்புக் கூறல் மட்டுமன்று, ஐநா மனிதவுரிமைப் பேரவையின் நம்பகத் தன்மையும் கட்டுக்கோப்பும் கூட இதில் பணயம் வைக்கப்பட்டுள்ளன.' என பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

'ஐநா 2009ம் ஆண்டு வடக்கை விட்டு வெளியேறித் தமிழர்களைத் தவிக்க விட்டது. இப்படித்தான் சிறிலங்கா தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் இனவழிப்புக் குற்றமும் நீடித்துச் செய்வதற்குக் கதவு திறந்து விடப்பட்டது.

மீண்டும் 2017ம் ஆண்டு, சிறிலங்கா ஐநா மனிதவுரிமைப் பேரவைக்குத் தந்த உறுதிகளை நிறைவேற்றுவதாகப் பாசாங்கு செய்ய மேலும் அவகாசம் தந்து, தமிழர் உரிமைகளை அரசு தொடர்ந்து மீறுவதற்கு இடமளித்த போதும் ஐநா தமிழர்களைத் தவிக்க விட்டது.

இந்த 2019ம் ஆண்டு ஆணையர் பசலேயின் ஊக்கமும் தலைமையும் துணையிருக்க, சிறிலங்கா அரசு என்ன குற்றஞ்செய்தாலும் தண்டிக்க இயலாது என்ற நிலைக்கு ஐநா மனிதவுரிமைப் பேரவை முற்றுப்புள்ளி வைத்துக் கதவைச் சாத்தி, தமிழர்களுக்கு உள்ளபடியே நீதியும் பொறுப்புக் கூறலும் பெற்றுத்தரப் பாதையமைக்கும் ஆண்டாகத் திகழும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது என அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter: @TGTE_PMO

Email: r.thave@tgte.org

English: https://www.einnews.com/pr_news/477419156/tgte-calls-on-un-high-commissioner-for-human-rights-to-halt-sri-lanka-s-unhrc-charade


நாதம் ஊடகசேவை

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Google+

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.